Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தடையை மீறி போராட்டம்! ஆயிரத்து 600 பேர் மீது வழக்கு!

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தெரிவித்து ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்து, டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பாக அதன் கூட்டணி கட்சிகளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

ஸ்டாலின் தலைமையிலான இந்த போராட்டத்தில், கே.வி. தங்கபாலு, கே. பாலகிருஷ்ணன், வைகோ, முத்தரசன் ,ஜவாஹிருல்லா, திருமாவளவன், பாரிவேந்தர் கொங்கு ஈஸ்வரன் ,வேல்முருகன். போன்ற கட்சித் தலைவர்கள் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்தில் ஆரம்பத்தில் டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது.

அதனை அடுத்து பேசத் தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், யாரை பாதுகாப்பதற்காக இந்த வேளாண் சட்டங்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார் இந்த சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றும் தெரிவித்தார். அதன்பிறகு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ,மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.

உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்த நிலையில், அந்த சமயத்தில் நிறைவுரை ஆற்றிய ஸ்டாலின், விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த இந்த போராட்டமானது தடையை மீறி நடந்து முடிந்து இருக்கின்றது. இதற்காக அரசு என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்க தயாராக இருக்கின்றது திமுக, விவசாயிகளுக்காக எதையும் செய்வோம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையிலே, வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 1600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சட்டவிரோதமாக கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

Exit mobile version