மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து! இந்த மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கப்படுமா??
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொங்கலுக்காக பொது மக்களுக்கு வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பரிசு மற்றும் வேட்டி சேலைகள் எரிந்து நாசம் ஆகியுள்ளன.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது எடுத்து அலுவலக வளாகத்தில் தங்கியிருந்த இரவு நேர காவலர்கள் தீயணைப்பு பொதுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு தல்லாகுளம் அனுப்பனாடி பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் தொடர்ந்து போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகள், ஆவணங்கள் மற்றும் மதுரை மாவட்ட நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு பொங்கலுக்காக வழங்குவதற்கு மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 50,000 வேட்டி சேலைகள் எரிந்து நாசமாகின.
மேலும் விபத்து நடந்த பகுதிக்கு வந்த தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு அறிவியல் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விபத்துக்கான காரணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்கு இன்று காலை முதல் டோக்கன் வழங்கப்பட உள்ள நிலையில் பொங்கலுக்கு வழங்கும் வேட்டி சேலை எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.