பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்!

0
202

பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்!

மாட்டுப்பண்ணையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்ட காரணத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் இளங்கன்றுகள் தீயில் கருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள செட்டியபட்டி என்னும் கிராமத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. செட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர்
50 -க்கும் மேற்பட்ட மாடுகளும் இளங்கன்றுகளும் மற்றும் நூற்றுக்கணக்கான ஆடுகளையும் வைத்து மாட்டுப்பண்ணை தொழில் செய்து வந்தார்.

ஆடு, மாடுகள் மூலம் பால் கறந்து விற்பது, ஆடுகளை விற்பனை செய்வது போன்ற வழிகளில் மனோகரன் தனக்கான வருமானத்தை ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாட்டுப் பண்ணையில் இருந்த மின்சார வயரில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக மின் உராய்வு ஏற்பட்டு திடீரென பண்ணை தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீவிபத்தை யாரும் உடனடியாக அறியவில்லை.

பின்னர், மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து முடிந்தவரை தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதனிடையே தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்து எஞ்சியிருந்த ஆடு,மாடுகளை காப்பாற்றினர். இந்த விபத்தில் முப்பது மாடுகள் இறந்துள்ளன. மேலும் தீயில் காயப்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திடீரென யாரும் எதிர்பாராத இந்த தீவிபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.