மே 18ல் விமான சேவை துவக்கம்?

0
141

மே 18ல் விமான சேவை துவக்கம்?

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை.

இன்று முதல் (12.05.2020) தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவையை துவங்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி முதல் உள்ளூர் விமான சேவையை துவங்குவதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் விமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால் பல விமான சேவை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தைப் பெருமளவில் பிடித்தம் செய்துள்ளன. இதனால் தங்களை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றுமாறு மத்திய அரசிடம் விமான சேவை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சமீபத்தில் அவுட்லுக் இதழுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, விமான சேவை குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும் பட்சத்தில் மே 15 அல்லது அதற்கு முன்னதாகவே உள்நாட்டு விமானச்சேவை துவங்குமெனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரயில் போக்குவரத்தைத் தொடர்ந்து விமான போக்குவரத்தைத் தொடங்கும் விதமாக விமான சேவை நிறுவனங்கள், டிராவல் ஏஜென்டுகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

விமான சேவை தொடங்கும் பட்சத்தில் பயணிகள் கீழ் கண்டவற்றை மேற்கொள்வது அத்தியாவசியமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  • விமான நிலையங்களில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முன் ஏற்பாடுகள் செய்யப்படும்.
  • விமான நிலையத்தில் காய்ச்சலை கண்டறியும் கருவி கட்டாயமாக்கப்படும்.
  • தற்காலிகமாக ஆன்லைன் டிக்கட்டுகள் மட்டுமே விற்கப்படும்.
  • ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயமாக்கப்படும்.
  • பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்
  • விமானத்தில் ஏறுவதற்கு முன் பரிசோதனை நடத்தப்படும். கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே விமானத்தில் அனுமதிக்கப்படுவார்கள.

வெளிநாட்டு விமான சேவை துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.