குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்!

0
226
#image_title
குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்! 
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமை இருந்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்தது. திரளான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கவே, அவர் பொதுக்குழுவை கூட்டி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார். அத்துடன், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலாளர் ஆனார்.
இதனை அடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதை தேர்தல் ஆணையமும் கடந்த 2 நாட்களுக்கு முன் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவாக இருந்தாலும், தனது செல்வாக்கை காட்ட ஏற்கனவே திட்டமிட்டபடி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் தனது ஆதரவாளர்களின் மாநாட்டுக்கு பன்னீர் ஏற்பாடு செய்துள்ளார். நாளை திங்கட்கிழமை முப்பெரும் விழா என்ற பெயரில் அந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு குறித்த பன்னீர்செல்வம் செய்திகளை சந்தித்து பேசினார் அப்போது, அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்பதை நன்கு அறிந்திருந்த எம்ஜிஆர், கட்சியின் உச்சபட்ச பதவிக்கு வருபவர் ‘அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்ற விதியை வகுத்தார்.
அவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும், அவர் வாழ்ந்த வாழ்க்கையை காலம் பத்திரமாக போற்றி பாதுகாக்கிறது. அதேபோன்று, ஜெயலலிதா இந்த மண்ணைவிட்டு மறைந்த பின்பும் அவர் அதிமுக தொண்டர்களுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்ததை காலம் போற்றி பாதுகாக்கிறது.
இது போன்ற பெருமைக்குரிய அதிமுக இயக்கத்தின் அடிப்படை விதிகளெல்லாம் மாற்றப்பட்டு, சின்னாபின்னமாகி, சுக்குநூறாக சிதறுண்டு ஒரு சிலரின் கையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை நினைக்கும்போது, ‘குரங்கு கையில் கிடைத்த பூமாலை’ போல என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
என்ன உதவி செய்தாலும் பாம்பின் குணம் போகவே போகாது. அது தன் விஷத்தை கக்கியே தீரும் என்பார்கள். பாம்பை போலவே மனிதர்களும் உள்ளனர். அவர்களை விரட்டி அடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது. இதைத்தான் ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார் அண்ணா. அரசியலில் எத்தனையோ பரமபத விளையாட்டுகள், ஆடுபுலி ஆட்டங்களை கடந்துதான் ஆக வேண்டும். இவற்றை நாம் எதிர்த்து நின்று வெற்றி பெறுவதற்கு நமது உழைப்பு மிகவும் அவசியம்.
நம்முடைய உழைப்பின் மூலமாக, துரோகத்தை துரத்தியடிக்கும் வகையில், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்டும் வண்ணம், அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சியின் பொன்விழா என முப்பெரும் விழா திருச்சி, ஜி கார்னர் மைதானத்தில் 24ம் தேதி நாளைமாலை 5 மணிக்கு நடக்கிறது. அனைவரும் வந்து ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.