தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாட்டம்!

0
214
#image_title

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாடப்பட்டது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம் ஆளுநர் மாளிகையில் கொண்டாட்டம்.

பிற மாநில ஆளுநர் மாளிகைகளில் தமிழ்நாடு உருவான தினத்தை கொண்டாடினால் சிறப்பாக இருக்கும், விழாவில் பங்கேற்ற மராட்டிய மாநில தொழிலதிபர் கருத்து தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல்முறையாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம் இன்று கொண்டாடப்பட்டது. வரும் காலங்களில் இந்த விழா இன்னும் சிறப்பாக கொண்டாடப்படும் என ஆளுநர் ரவி தெரிவித்து இருக்கிறார்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தின விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் வசிக்கும் இரு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், பல்வேறு வர்த்தக சங்க நிர்வாகிகள் விழாவில் பங்கேற்றனர்.

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக இது போன்ற ஒரு விழாவை எடுத்ததற்காக , ஆளுநர் ரவியை பாராட்டி பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

விழாவில் பேசிய ஆளுநர் , இந்தியா என்பது அரசர்களால் உருவாக்கப்படவில்லை என்றும், ஆட்சியாளர்களால் கட்டமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்த அவர், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டது தான் பாரத நாடு என்றும் தெரிவித்தார்.

பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் நாட்டில் இருந்தாலும், பாரத மாதாவின் இதயம் ஒன்று தான் என்றும் தெரிவித்த ஆளுநர், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கூட தமிழகத்திற்கு உயர்கல்வி படிக்க மாணவர்கள் இங்கே வருகிறார்கள் என்றும், தமிழகத்திற்கு வருபவர்களை அன்பு காட்டுவதிலும், விருந்தோம்பல் செய்வதிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்றும் தெரிவித்தார்.

மொழிவாரியாகவும், நிர்வாக வசதிக்காகவும், பல்வேறு மாநிலங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்றும், அந்த வகையில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினத்தை இங்கே கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார் . வரும் காலங்களில் இந்த விழா மேலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

விழாவில் பங்கேற்று பேசிய வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த மகாராஷ்டிரத்தை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் மகேஷ் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் தமிழகத்தில் பிறந்ததாகவும், ஆனால் பூர்வீகம் மராட்டிய மாநிலம் என்றும் தெரிவித்த மகேஷ் , ஆளுநர் மாளிகையில் இது போன்ற ஒரு விழா நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதற்கு ஏற்ப, பிற மாநில மக்களை அன்பு காட்டி தமிழகம் வாழ வைக்கிறது என்றும் தெரிவித்தார் .

தமிழக ஆளுநர் மாளிகையில் பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாடப்படுவதைப் போல, பிற மாநில ஆளுநர் மாளிகைகளில் தமிழ்நாடு உருவான தினத்தையும் கொண்டாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.