Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் விவசாயத்தை தனது தொழிலாக செய்து வந்தார். தனது விவசாய தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கியில் கடன் வாங்கியிருந்தார்.

விவசாயம் செய்து வந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையை கட்டமுடியாமல் தர்மலிங்கம் தவித்துள்ளார். சரிவர தவணை கட்டாத காரணத்தால் வங்கி அதிகாரிகள் தர்மலிங்கத்தின் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக நோட்டீஸ் அனுப்பினர்.

இதைப்பார்த்து வேதனை அடைந்த விவசாயி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கடனை அடைக்க பார்த்துள்ளார். அனைத்தும் தோல்வியில் முடிந்து போனதால் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு போனார். இதனையடுத்து நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தர்மலிங்கம் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், தர்மலிங்கம் போன்ற எத்தனையோ விவசாயிகள் இன்னும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

Exit mobile version