சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் மாணவி சரண்யா. இவர் பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே தனது பட்டப்படிப்பை படிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார். அதன்பின் தியாகராஜா நகரில் இருக்கும் அப்பலோ கல்லூரி நிர்வாகத்தின் கிளை அலுவலகத்திற்கு சென்று உள்ளார்.
அந்த அலுவலகத்தில் அப்பலோ கல்லூரி சென்னைக்கு மிக அருகில் இருக்கும் பூந்தமல்லியில் இருக்கிறது என்றும் அங்கு படிக்க சீட்டு வேண்டும் என்றால் 6,000 ரூபாய் பணம் செலுத்தினால் போதுமானது என்று முதலில் தெரிவித்துள்ளனர்.
அந்த மாணவி சரண்யாவும் பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே இந்த கல்லூரியில், பி.காம். பைனான்சியல் அக்கவுண்டிங் படிக்கலாம் என்று முடிவெடுத்து தனது சான்றிதழ்களையும் அவர்கள் சொன்ன தொகையையும் எடுத்துக் கொண்டு மீண்டும் அந்த அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு அவர்கள் 350 ரூபாய் விண்ணப்ப கட்டணம் என்றும் 2,650 ரூபாய் சேர்க்கை கட்டணம் என்றும் இதர கட்டணமாக ரூபாய் 15,000 என்றும் இவ்வாறு பல காரணங்களை காட்டி ஆகமொத்தம் 24 ஆயிரம் மொத்த கட்டணம் என்று தெரிவித்துள்ளனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சரண்யா தனது பெற்றோர் சேர்த்து வைத்த தொகை, மேற்படி கடன் வாங்கி இந்த தொகையை செலுத்தி தனது படிப்பை படித்தாக வேண்டும் என்று நம்பிக்கையுடன் முடிவெடுத்துள்ளார்.
படிப்பதற்கு பூந்தமல்லியில் இருக்கும் கல்லூரிக்கு சென்றபோதுதான் சரண்யாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பூந்தமல்லி மிக அருகில் இருக்கும் கல்லூரி என்று கூறி மோசம் செய்துள்ளனர். கல்லூரி வெகுதொலைவில் இடம்பெற்றுள்ளது. கல்லூரிக்கு சென்று வர அரசு பேருந்து வசதி ஏதுமில்லை.
இதனால் விரக்தி அடைந்த சரண்யா மீண்டும் அந்த அலுவலகத்திற்கு சென்று பூந்தமல்லியில் இருக்கிறது என்று கூறி ஏன் ஏமாற்றி விட்டீர்கள் என்று கேட்டுள்ளார். கல்லூரி பேருந்தில் சென்று வர மேலும் 30 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தனது படிப்பை பின்னர் தொடர்ந்து கொள்ளலாம் என்று எண்ணிய சரண்யா, தான் செலுத்திய தொகையையும் இதர சான்றிதழையும் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அந்த அலுவலகத்தில் சீனியர் பதவியிலிருக்கும் வெங்கட்ராமன் என்பவர் உங்களால் ஆனதை பார்த்துக்கொள்ளுங்கள் என்று மிரட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தனது படிப்பையும் தொடர முடியாமல் இவர்களிடம் இருந்து பணத்தையும், சான்றிதழ்களையும் பெற முடியாமல் மாணவி சரண்யா தவித்து வருகிறார். தற்போது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடந்தவற்றைக் கூறி அப்பலோ கல்லூரி நிர்வாகத்தின் கிளை அலுவலகத்தின் மீது புகார் அளித்துள்ளார் மாணவி சரண்யா.
இந்த மாணவி சரண்யா தனது தலைமுறையின் முதல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க முயற்சி எடுத்துள்ளார். ஆனால் இவருக்கு நேர்ந்த மோசடிக்கு சென்னை பெருநகர காவல்துறையினர் நியாயம் பெற்று தருவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் மாணவி சரண்யா….