தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை குடிசைவாழ் பகுதி மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் இன்று காலை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 13ம் தேதி வரை இலவச உணவு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி சென்னையில் சுமார் 5.3 லட்சம் குடும்பங்கள் குடிசைப் பகுதிகளில் வசித்து வரும் நிலையில், மொத்தம் 26 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு இன்று காலை முதல் இலவச உணவளிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது. சமுதாய நலக் கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் குடிசைப் பகுதி மக்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று காலை மக்களுக்கு உணவு வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை குடிசைவாழ் பகுதி மக்களுக்கு இலவச உணவு வழங்கும் இத்திட்டம் பெரிய அளவில் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.