Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை – டாஸ்மாக் அதிர்ச்சி

சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை – டாஸ்மாக் அதிர்ச்சி

சீர்காழியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுபானம் வாங்கியவரின் பாட்டிலில் தவளை செத்துக் கிடந்ததையடுத்து மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 40 நாட்களுக்கு மேலாகப் பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் 7ம் தேதி காலை திறக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் மது பாட்டில் ஒன்று வாங்கியுள்ளார்.

அங்கிருந்து நேராக வயல் பகுதிக்குச் சென்று அந்த பாட்டிலைத் திறந்து பாதி மதுவைக் கோப்பையில் ஊற்றிவிட்டு மீண்டும் பாட்டிலை மூடும் போது பாட்டிலினுள் ஏதோ இருப்பதைப் பார்த்துள்ளார். இதனையடுத்து அது என்னவென உற்றுப் பார்த்த போது பாட்டினுள் தவளை ஒன்று மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அருகிலிருந்த ஒருவர் மூலம் மதுபானக் கடைக்குத் தகவல் தெரிந்துள்ளது.

இதனையடுத்து தகவல் வெளியே தெரியாமல் மறைக்கத் தவளையுடன் இருந்த மது பாட்டிலைப் பெற்றுக்கொண்டு உடனே புது மதுபாட்டிலை கடை ஊழியர்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளரான அம்பிகாபதியை செய்தி தொலைக்காட்சி ஒன்று தொடர்பு கொண்டு கேட்ட போது “இதுவரை தங்கள் கவனத்திற்குத் தகவல் வரவில்லை. ஒயின் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும்போது பரிசோதித்தே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ரம் போன்ற மது வகைகளில், நிறுவனங்களிலிருந்து வரும்போது ஏதேனும் தவறு நடைபெற்றிருக்கலாம். எனவே இனிவரும் காலங்களில் மதுபாட்டில்களையும் நன்கு பரிசோதித்தே வழங்க ஊழியர்களை அறிவுறுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

உஷாராக இருங்கள் மதுப்பிரியர்களே

Exit mobile version