நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

0
143

நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலின் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  முழு ஊரடங்கை அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில் கடந்த 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, கடந்த 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையிலும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் இந்த முழு ஊரடங்கின்போது மருந்துகள் மற்றும் பால் விநியோகம் செய்வதற்கான மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதைத்தவிர மற்ற, அனைத்து வகை கடைகளையும் மூட உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் முழு ஊரடங்கை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், நோய் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்த முழு ஊரடங்கின்போது கடந்த 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த முழு ஊரடங்கு நாளில் அனைத்து மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் வழக்கமாக இயங்கும் ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை கார்கள் ஆகியவை பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.