G-20 மாநாடு அழைப்பிதழ்.. இந்தியாவிற்கு பதில் பாரத்! வலுக்கும் கண்டனம்!

0
123
#image_title

G-20 மாநாடு அழைப்பிதழ்.. இந்தியாவிற்கு பதில் பாரத்! வலுக்கும் கண்டனம்!

நடப்பாண்டிற்கான ஜி-20 மாநாடு வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் இந்தியாவில் நடக்க இருக்கின்றது.இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் உலகத் தலைவர்களை விருந்திற்கு அழைக்கும் விதமாக அச்சிடப்பட்டிருக்கக்கூடிய அழைப்பிதழ் தான் தற்பொழுது விவாத பொருளாக மாறியுள்ளது.

அந்த ஜி-20 மாநாட்டு அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு மாறாக பாரத் குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருக்கிறது.தற்பொழுது இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்நிலையில் அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதில் பாரத் பெயர் என மாற்றப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.அதில் “அந்தச் செய்தி உண்மைதான். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 9 நடைபெறும் இரவு விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வந்துள்ளது. அதில் வழக்கத்துக்கு மாறாக ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 1 இனி இந்தியா என்றழைக்கப்பட்ட பாரதம்,மாநிலங்களின் ஒன்றியம் என வாசிக்கப்படும்போல.மாநிலங்களின் ஒன்றியம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பார்த் சர்ச்சை குறித்து காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் “பாஜகவின் நாசகார புத்தியால் மக்களை எப்படி பிரிப்பது என்றுதான் சிந்திக்க முடியும்.இந்தியர்களுக்கும் பாரதியர்களுக்கும் இடையே மீண்டும் பிளவை உருவாக்குகிறார்கள். நாம் தெளிவாக இருப்போம் – நாம் ஒருவரே! அரசியல் சாசனத்தின் பிரிவு 1,இந்தியா,அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் எனக் கூறுகிறது. இண்டியா கூட்டணியைக் கண்டு அவர்கள் அச்சப்படுவதால் இதுபோன்ற அற்ப அரசியலைச் செய்கிறார்கள். பிரதமர் மோடி, உங்களால் என்ன முடியுமோ, அதைச் செய்யுங்கள். ஆனாலும், பாரதம் இணையும்; இந்தியா வெல்லும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பார்த் குறித்து கண்டனக்குரல் எழுப்பி வரும் நிலையில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்,மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.அவர் பேசுகையில் “காங்கிரஸ் கட்சிக்கு எல்லாவற்றிலும் பிரச்சனை இருக்கிறது.அதுகுறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.நான் ஒரு ‘பாரதவாசி’,என் நாட்டின் பெயர் ‘பாரதம்’,எப்போதும் ‘பாரதமாக’ இருக்கும்.காங்கிரஸ்க்கு இதில் ஏதாவது பிரச்சனை என்றால்,அதற்கு அவர்கள்தான் மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.