Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மண் சேர்க்காமல் செய்யும் விநாயகர் சிலைகள்!! மானாமதுரையில் இருந்து சிங்கப்பூர், மலேசியாவிற்கு ஏற்றுமதி..!

சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுச்சாணத்தால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு சீசனுக்கு ஏற்ப மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர்.

மேலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால், பெரிய அளவில் சிலைகளைத் தயாரிக்காமல், சிறிய அளவிலான சிலைகளைத் தயாரிக்கின்றனர். இந்நிலையில், மானாமதுரை அருகே குஞ்சுக்காரனேந்தலில் மாரிமுத்து மற்றும் அவரது மனைவி தீபா ஆகிய இருவரும் மாட்டுச் சாணத்தை உபயோகப்படுத்தி, அதன்மூலம் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். இதில் எந்த ஒரு மண் வகையையும் சேர்க்காமல் மாட்டுச்சாணத்துடன் கடுக்காய் உள்ளிட்ட 13 வகைப் பொருட்களைச் சேர்த்து விநாயகர் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர்.

மாட்டுச்சாணத்தால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் பெரும் அளவில் வரவேற்பு உள்ளது. இதனால், அங்குள்ள தமிழர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் விநாயகர் சிலைகளை செய்து சரக்கு விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்கிறோம் என்று தம்பதியினர் கூறுகின்றனர்.

Exit mobile version