காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்! கட்சியில் இருந்தும் வெளியேற்றப்படுகிறாரா?

0
131

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதுகுறித்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கமிட்டி அறிக்கையில், காங்கிரஸ் தலைவருக்கு துணையாக செயல்பட சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதில் நிர்வாக ரீதியில், அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் இந்த குழுவானது, தலைவருக்கு ஆலோசனைகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்து முடிந்த காங்கிரஸ் காரிய கமிட்டிக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

6 பேர் கொண்ட அந்தக் குழுவில் ஏ.கே.அந்தோனி, அகமத் படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இந்தக்குழுவின் மூலமாக எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையிலும் காங்கிரஸின் பொதுச் செயலாளராக பதவி வகித்த குலாம் நபி ஆசாத் பதவியிலிருந்து தற்போது விடுவிக்கப்படுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு முன்பாக, காந்திக்குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என தலைமைக்கு கடிதம் எழுதியவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சி செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.