சோனியா காந்தியை சந்திக்கும் குலாம் நபி ஆசாத்! முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு!!
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பஞ்சாபிலும் தனது ஆட்சியை இழந்தது. அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் வெறும் இரண்டே தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.
தேர்தல் தோல்விக்கு பிறகு கடந்த 13ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஐந்து மாநில தேர்தல் தோல்விகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் வீட்டில் அதிருப்தி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குலாம் நபி ஆசாத் இன்று சோனியா காந்தியைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் இந்தச் சூழலில் நடைபெற உள்ள இந்தச் சந்திப்பு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று மதியம் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான பூபிந்தர்சிங் ஹூடாவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது கட்சியில் மறுசீரமைப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ததாக செய்தி வெளியானது.
மேலும், இந்த சந்திப்பில் ராகுல் காந்தியிடம், கட்சியின் அனைத்து தலைவர்களிடமும் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று பூபிந்தர் ஹூடா வலியுறுத்தி உள்ளதாக கூறப்பட்டது.