சென்னை அருகே ஹீட்டர் தண்ணீர் சூடாகி விட்டதா எனத் தொட்டுப் பார்த்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை அம்மணி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் அனிதா (வயது 20) தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அனிதாவின் தாயார் நேற்று காலை தேநீர் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அனிதா குளிப்பதற்காக வாளியில் ஹீட்டர் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீர் சூடாகி விட்டதா..? என்பதைப் பார்க்க வாளியில் இருந்த தண்ணீரை தொட்டு பார்த்துள்ளார். அப்போது ஹீட்டரில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அனிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடைக்குச் சென்று வீடு திரும்பிய தாயார், மகள் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஹீட்டர் போன்ற மின்சாரம் சம்பந்தப்பட்ட பொருட்களை கையாளும்போது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஹீட்டர் தண்ணீருக்குள் இருக்கும் போது அதை தொடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். வாட்டர் ஹீட்டர் உபயோகத்தினால் பரிதாபமாக இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.