கணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?

0
297

கணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?

ஒவ்வொரு ஊரிலும் திருமண வயதைக் கடந்து, ஆனால் திருமணம் ஆகாமல், 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பலர் உள்ளனர். பெண்ணிற்கு திருமண வயது 18, ஆணுக்கு 21 என்று சட்டம் உள்ள போதிலும் ஏன் இன்னும் திருமணமாகாமல் இத்தனை பேர் உள்ளனர்? ஏன் திருமணத்தில் யாருக்கும் நாட்டம் இல்லையா? என்றால் விருப்பமெல்லாம் இருக்கு ஆனால் பெண் தான் கிடைக்கல என்ற பதில் தான் பொதுவாக எதிரொலிக்கிறது. என்ன காரணம் என்று ஆராய்ந்தால், ‘வெல் செட்டில்டு’ மாப்பிள்ளை தான் வேணுமாம் இப்போதுள்ள பெண்களுக்கு.

திருமணத்தில் ஆண், பெண்களின் எதிர்பார்ப்பு தான் என்ன? பெற்றோர் காட்டிய வரனை மறு பேச்சு பேசாமல் திருமணம் செய்து கொண்டதெல்லாம், நம் தாத்தா பாட்டி காலத்தோடு முடிந்து விட்டது. நன்கு படித்த மாப்பிள்ளை, சொந்த வீடு, கார், 40,000 த்திற்கும் மேல் சம்பளம் என, இருந்தால் மட்டுமே தற்போது பெண்கள் திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர்.

திருமணம் முடிந்தவுடன், தனிக்குடித்தனம் செல்வது, நாத்தனார் தொல்லை இருக்க கூடாது போன்றவை கூடுதல் கண்டிஷன்கள். 30 வயதைக் கடந்தாலும் பரவாயில்லை, மேற் சொன்ன தகுதிகள் இருந்தால் மட்டும் தான் திருமணம் என்ற பெண்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் ஆண்கள் இன்னும் பிரம்மச்சாரியாகவே உள்ளனர்.

பெண்கள் தற்போது அதிகமாக படிக்கவும், சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். ஆணுக்கு பெண், சமம் என்பது இன்று, எல்லா துறைகளிலும் சாத்தியம் என்பதால், தனக்கு இணையாக அல்லது தன்னை விட அதிகமாக சம்பாதிக்கும் ஆண் தான் தனக்கு கணவனாக வர வேண்டும் என்ற பெண்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைய படித்த பெண்களிடம் உள்ளது. இதனால் இன்று 30 வயதைக் கடந்து பெண்களும், 35 வயதைக் கடந்து ஆண்களும் இன்னும் பேச்சுலர்களாக உள்ளனர்.

பொதுவாகவே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து, வேலை கிடைத்து குடும்பத்தை ஒரு நிலைக்கு கொண்டு வரவே ஆண்களுக்கு 27 வயது பூர்த்தியடைந்து விடுகிறது. அதற்கு மேல், பெண்கள் எதிர்பார்க்கும் தகுதிகளை அடைய வேண்டுமானால் அதற்கும் மேல் கால தாமதம் ஆகத் தானே செய்கிறது. கிட்டத்தட்ட பெண்கள் தான் தற்போது ஆண்களிடம் வரதட்சணை எதிர்பார்க்கின்றனர்.

மாறி வரும் காலச்சக்கரத்தில், தாமதமாக திருமணம் முடித்தால் ஏற்படக் கூடிய சாதகம், என்னென்ன என்பதை அறிந்தும் பெற்றோர்களே இதற்கு ஒத்து ஊதுவது தான் கொடுமையிலும் கொடுமை. எல்லாம் கிடைத்து செட்டிலான மாப்பிள்ளை தான் வேண்டுமென்றால் நீங்கள் நேரிடையாக அறுபதாம் கல்யாணம் தான் செய்ய முடியும்.

வாழ்வில் கஷ்டம் நஷ்டம் எல்லாவற்றையும் எதிர்கொள்ள பழகுங்கள். அழகு, சம்பாத்தியம் என்று அழிந்து போகும் புற தோற்றத்திற்காக உங்களின் நல்ல வரன்களை தட்டிக் கழிக்காதீர்கள். பருவத்தே பயிர் செய் என்பது முன்னோர் சொல், இதை அறிந்து, புரிந்து நடந்தால், வாழ்க்கை சொர்க்கமாகும்.