சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி!

0
105

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி!

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அதைக் கொண்டாட வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் வெளியூரில் வேலை செய்வோர் ஆகியோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.

அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை முதல் 13-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய பயணிகளின் வசதிக்காக பேருந்துகளில் நெரிசலை குறைக்கும் வண்ணம் பயணிகள் நெரிசல் இல்லாமல் நிம்மதியாக பயணிக்க ஏதுவாக ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,300 பேருந்துகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு நாளை முதல் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளைய தினம் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும்  வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 420 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, கொரோனா தொற்று கட்டுப்பாடு குறித்து இன்று ஆலோசிக்கப்படுவதாகவும் அதில் எடுக்கப்படும் முடிவுகளின்படி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான கட்டுபாடுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.