உடல் எடையை குறைக்கும் வரகு நெல்லிக்காய் சாதம் – சுவையாக செய்வது எப்படி?
வரகரிசியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வரகரிசியில் மாவுச்சத்து குறைவாக உள்ளது. அதே சமயம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் வரகரிசி மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கிறது. மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, உடல் எடையை குறைக்கிறது.
நெல்லிக்காய் உள்ள வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து நம் உடலுக்கு பல நன்மைகளை செய்கின்றன. மேலும், நெல்லிக்காய் சாப்பிட்டு வர, நன்கு முடி வளர்ச்சிக்கு உதவி செய்யும். மேலும், நெல்லிக்காய் உடல் நல பிரச்சனைகளைக் குணப்படுத்தும். மேலும் உடல் எடை குறைய நெல்லிக்காய் பெரிதும் உதவி செய்யும்.
தேவையான பொருட்கள்
வரகரிசி – 2 கப்
பெரிய நெல்லிக்காய் – 10
பெருங்காயம் – சிறிதளவு
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
வர மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 3
கடுகு – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் வரகரிசியை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அதில் வரகரிசியை சேர்த்து 5 முதல் 8 நிமிடங்கள் நன்றாக வேகவிட வேண்டும்.
வரகரிசி வெந்தபிறகு, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
இதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்க வேண்டும். பின்னர், கறிவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும்.
இதனையடுத்து, அதில் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
பின்னர், அடுப்பை இறக்கியதும் நெல்லிக்காய் கலவையை ஆற வைக்க வேண்டும். ஆறியதும், வரகு சாதத்தை அதனுடன் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வரகு நெல்லிக்காய் சாதம் ரெடி.