சாலை விதிகள் என்பது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயமாகும். தமிழகத்தில் தற்பொழுது சாலைவிதிகளை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக, சிலர் விதி மீறல்கள் நடப்பதை தடுக்கும் விதமாக புகைப்படம் அல்லது வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் பொழுது செல்போன் பயன்படுத்திக் கொண்டு அல்லது செல்போன் பேசிக்கொண்டு பேருந்துகளை இயக்குகின்றனர்.
இவ்வாறு செய்வதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், இது விபத்துக்களை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறி தமிழக போக்குவரத்து கழகம் இதற்கு தீர்வு காணும் வகையில் முடிவு ஒன்றினை உருவாக்கியிருக்கிறது.
அந்த வகையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் அவர்கள் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று தற்போது போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் சமீப காலமாக இது போன்ற செய்திகள் வெளியான நிலையில் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தற்போது அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தககூடாது என்றும் மீறினால் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.