அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும்! அரசு அறிவிப்பு!!

0
112

அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும்! அரசு அறிவிப்பு!!

இயந்திரங்களை கொண்டு நெசவுத்தொழில் நடைபெற்றாலும் கைத்தறி ஆடைகளுக்கான மதிப்பே தனிதான். இந்த நிலையில் கைத்தறி நெசவுத்தொழிலுக்கான மூலப்பொருள் விலையேற்றம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக விற்பனையில் ஏற்பட்ட தேக்கம் போன்ற காரணங்களால் கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அம்மாநில அரசு கருதியது. இதன் காரணமாக கேரள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் அணியும் பள்ளி சீருடைகள் கைத்தறி மூலமே தயாரிக்கப்பட வேண்டும் என அம்மாநில அரசு சார்பில்  அண்மையில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான சீருடை கைத்தறி முறையிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும் என அம்மாநில தொழில்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

கேரளாவில் அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன் கிழமைகளில் அலுவலகத்திற்கு வரும்போது கைத்தறி ஆடை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நடைமுறையை எம்.எல்.ஏ-க்களும் பின்பற்றலாம் எனவும் இதன் மூலம் கைத்தறி தொழில் மேம்படும் என அவர் கூறியுள்ளார்.

இதற்குமுன்பு, கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த கொரோனா காலத்தில் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டு பெரும் பொருளாதார நட்டத்தையும், நலிவையும் கைத்தறி நெசவாளர்கள் சந்தித்து வந்தனர்.

இந்த சூழலில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடையை அணிந்து கொண்டு அலுவலகம் வர வேண்டும் என கடந்த வருடம் தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது இங்கு  குறிப்பிடத்தக்கது.