சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் தா மோ அன்பரசன்!!

0
232
#image_title

சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழகத்தில் 400 தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாகவும், வருடம் ஒன்றிற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு விற்பனையாகிறது என்று கூறினார்.

விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 5 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டு வருகின்றனர் எனவும், பிளாஸ்டிக் லைட்டரால் தீப்பெட்டி தொழில் பாதித்துள்ளதாகவும், குறைந்த விலையில் 20 தீப்பெட்டி உடைய அளவில் இந்த லைட்டர் வந்துள்ளதால் மொத்தமாக 20% அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இது குறித்து கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதாக சுட்டிக்காட்டிய அவர், அதன் தொடர்ச்சியாக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயலாளரும் மத்திய அரசிற்கு கடிதம் எழுதினார் என்றும் தெரிவித்தார்.

தற்பொழுது குஜராத் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு அடிப்படையில் கூடுதல் உத்தரவுகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.