தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர ஒவ்வொரு கல்லூரிகளிலும் மட்டும் விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாகவும், தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் நேரடி விண்ணப்ப முறைக்கு தமிழக அரசு தடைவிதித்தது
இதனால் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆன்-லைனில் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்ப பதிவு முறையை தமிழக உயர்கல்வித்துறை அறிமுகம் செய்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 20 ஆம் தேதி மாலை 6 மணி முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.
மேலும் இணைய வசதி இல்லாத மாணவ-மாணவிகளுக்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒரு அரசு கல்லூரியில் சேவை மையம் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சான்றிதழ் பதிவேற்றம் நாளை தொடங்க இருந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி தான் சான்றிதழ் பதிவேற்றம் தொடங்கும் என்றும்
www.tngasa.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழக முழுவதும் அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர,இதுவரை 2.09 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் தெளிவித்துள்ளார்.