சாலைகளில் குப்பை கொட்டினால் இனி அபராதம்! வெளியானது அறிவிப்பு 

0
120
Greater Chennai Corporation

சாலைகளில் குப்பை கொட்டினால் இனி அபராதம்! வெளியானது அறிவிப்பு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கும், மக்காத குப்பையை தனித்தனியே சேகரிக்க 2 குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். நடைபாதை, சாலைகளில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் தினமும் சராசரியாக 5,200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும், மக்காத குப்பையாக வகை பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 78,136 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மக்கும், மக்காத குப்பையாக வகை பிரித்துசேகரிக்கும் வகையில் 2 குப்பைத்தொட்டிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 26,242 கடைகளில் மக்கும், மக்காதகுப்பையாக வகை பிரிக்கும் வகையில் 2 குப்பைத் தொட்டிகள் வைத்துகுப்பை சேகரிக்கப்படுகிறது. மற்றகடைகளில் 2 குப்பைத் தொட்டிகளை விரைந்து வைக்குமாறுஉரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளில் சேகரமாகும் குப்பையை மக்கும், மக்காத குப்பையாக வகை பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும். நடைபாதை, சாலைகளில் குப்பையை கொட்டும்கடை உரிமையாளர்களுக்கு ரூ.500அபராதம் விதிக்கப்படும்.

மாநகராட்சி பகுதியில் குப்பை தேங்கியுள்ளது தொடர்பாக 1913என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உர்பேசர் சுமீத் நிறுவனம்மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 89255 22069 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். சென்னை என்விரோ நிறுவனம் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 1800-833-5656 என்ற எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.