Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி ஏற்றார் பிரியா!

தமிழ்நாட்டில் சென்ற 19ஆம் தேதி நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்று எதிர்க்கட்சியான அதிமுக கடுமையாக குற்றம் சாட்டியது.

அதோடு சென்னை தண்டையார்பேட்டையிலிருக்கின்ற ஒரு வாக்குச்சாவடியில் திமுக கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக கிடைத்த தகவலினடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு சென்று திமுகவிற்கு கள்ள ஓட்டு போட முயற்சித்த நரேந்திரகுமார் என்பவரை பிடித்து அவளுடைய சட்டையை கழற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

அவருடைய இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்தநிலையில், ஜெயக்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியான திமுக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலராக பதவி ஏற்றார்கள் இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத்தலைவர் உள்ளிட்டோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில் திமுகவின் மேயர் வேட்பாளராக ஆர்.பிரியா அறிவிக்கப்பட்டிருந்தார் அவர் இன்று சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் சென்னை மேயராக ஆர் பிரியா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு சென்னை மாநகர ஆணையர் ககன்தீப்சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து பிரியாவுக்கு சென்னை மாநகர ஆணையர் வாழ்த்துக்களை தெரிவித்து அங்கியையும் வழங்கினார்.

அங்கியணிந்து இருக்கையில் அமர்ந்தார் பிரியா அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

மிகவும் இளம் வயது மேயர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் பிரியா திமுகவின் மேயரான இவர் சென்னையின் முதல் பெண் மேயராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version