மளிகை கடைகாரரின் உயிரிழப்பு! முழு பொறுப்பும் காவல்துறையையே சாரும்! சேலத்தில் நடந்த பயங்கரம்!
தற்போது தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், சேலமும் தொற்று பாதித்த 11 மாவட்டங்களில் ஒன்றாக உள்ளதால், அங்கும் இன்னும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில், இடையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற முருகேசன் இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்பொழுது அந்த வழியாக செல்லும்போது ஆத்தூர் இடையப்பட்டி வாகன சோதனை நிலையம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்பொழுது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர் ஒருகட்டத்தில் பொறுமையை இழந்து முருகேசனை நடுரோட்டிலேயே சரமாரியாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பிறகு அவரை அங்கிருந்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன் பின் அவரை அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்பொழுது அவரை காவல்துறையினர் கொடூரமாக நடு ரோட்டில் வைத்து தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் சமூக வலைத்தளத்தில், வைரலாகும் இந்த வீடியோவில், சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவருக்கும் குரல் கொடுத்த அரசியல் கட்சியினர் ஏன் தற்போது சேலம் முருகேசனுக்கு வாய் திறக்க மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்பொழுது வரை சம்ந்தப்பட்ட காவல் நிலையத்தை 200க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
போலீசாரை பொறுத்த வரையில் வேறு யாரிடமும் உள்ள வெறுப்பை இவர் மீது காட்டினார்களோ அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொள்ளவும் அரசு ஆணையிட வேண்டும் என்றும் குரல்கள் வலுத்து வருகின்றன.