அமலுக்கு வந்தது அரிசி பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான வி எஸ் டி வரி விதிப்பு! விலைவாசி உயர்வால் மக்கள் அதிருப்தி!

0
174

அரிசி, பால், தயிர், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதத்தை அதிகரித்து 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இந்த புதிய வரி விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நடைமுறை தற்போது அமலுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எடையளவு சட்டத்தினடிப்படையில் பேக்கிங் செய்யப்பட்ட பால், மோர், உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்து நேற்று முதல் அமலுக்கு வரும் என்று கடந்த ஜூன் மாதமே ஜிஎஸ்டி கவுன்சில் செய்தி ஒன்றை வெளியிட்டது.

விலக்கு வழங்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களான கோதுமை அரிசி போன்ற பொருட்களுக்கும் தற்போது 5 சதவீதமாக ஜிஎஸ்டி விதித்து ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனை தவிர்த்து காசோலை புத்தகத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். 12 சதவீதமாக இருந்த எல்இடி பல்பிற்கான ஜிஎஸ்டி தற்போது 18 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

அதோடு மருத்துவமனைகளில் ஐசியூக்களை தவிர்த்து ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரையில் வசூலிக்கும் அறைகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் மருத்துவமனைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 1000 ரூபாய் வரையில் வசூல் செய்யும் ஹோட்டல் அறைகளுக்கு புதிதாக ஜிஎஸ்டி வரியை விதித்து அதனை 12 சதவீதமாக அறிவித்திருக்கிறது ஜிஎஸ்டி கவுன்சில். நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்து தற்போது 7 சதவீதத்திலிருக்கிறது.

இதன் காரணமாக, ஏற்பட்டிருக்கின்ற விலைவாசி உயர்வு சாமானிய மக்களை துன்புறுத்தும் நிலையில், இந்த ஜிஎஸ்டி வரி உயர்வை சற்றே தாமதமாக கொண்டு வந்திருக்கலாம் என்று தொழிலதிபர் அர்ச்சித்க்குப்தா தெரிவித்திருக்கிறார்.