சென்ற 2018 ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கோவில் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்றார். அப்போது மேடை அமைப்பது குறித்து காவல்துறையினருக்கும், அந்த கட்சியினருக்கும், இடையே பிரச்சனை உண்டானது.
அந்த சமயத்தில் எச் ராஜா காவல் ஆய்வாளர் மனோகரன் பார்த்து மிகவும் ஆக்ரோசமாக கத்தி இருக்கின்றார். அதோடு நீதிமன்றம் தொடர்பாக அவதூறாக பேசி இருக்கின்றார். இதனடிப்படையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை நடத்தப்பட்டு திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கை விசாரணை செய்த சமயத்தில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எச் ராஜா நேரில் வந்து ஆஜராக அறிவுறுத்தினார்கள். இந்த சூழ்நிலையில், காவல்துறையினர் அவர் தலைமறைவாக இருக்கிறார் என்று ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்கள். அதோடு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்தார்கள். இதன் காரணமாக, எச்சரிக்கையான எச் ராஜா நான் தலைமறைவாக இல்லை என்று தெரிவித்து முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அடுத்த விசாரணை சமயத்தில் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த சூழ்நிலையில், முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா திருமயம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகி இருக்கிறார். அவருடன் மாவட்ட நிர்வாகிகள் பலரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்ததாக சொல்லப்படுகிறது.