Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!

#image_title

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை! 
திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இது குறித்த கருத்து மோதல்கள் தற்போது தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டுள்ளன. மேலும் இந்த அறிக்கை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவிற்கு 500 கோடி தர வேண்டும் எனவும், அதற்கு பதில் தரும் வகையில் தனக்கு திமுக ஐந்நூறு கோடியே ஒரு ரூபாய் தர வேண்டும் எனவும் மாறி மாறி குற்றம் சாட்டி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் பாஜகவின் அங்கமாக திகழும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணி தமிழகம் முழுவதும் 45 இடங்களில் நடத்தப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் கடும் கட்டுபாடுகளை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனிடையே கோவை தேர்நிலை திடலில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு பின்னர் பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்) உட்பட 8 அமைப்புகள்  மத்திய அரசால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. தடைக்கு மறுநாள் தமிழ்நாட்டில் திருமாவளவன், சீமான் ஆகியோர் மனித சங்கிலி நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது. அது மனித சங்கலி அல்ல. சங்கிலியின் ஒரு பிட்டு தான்.
ஆனால் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு இவர்கள் தடை விதித்து வந்தார்கள். சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுக்க அறிவுறுத்தியும், காசை கொண்டு உச்ச நீதிமன்றம் சென்று தடை விதிக்க கூறினார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என கூறிவிட்டது. எனக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தமிழக அரசு, டிஜிபி யாருக்காக இருக்கின்றனர்? தேச துரோகிகளுக்கா? பயங்கரவாதிகளுக்காக? என கேள்வி எழுப்பினார்.
இந்த மாநில அரசு தேச துரோகிகளின் அரசு என நான் பலமுறை கூறி வந்துள்ளேன். அது நேற்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல்துறை மற்றும் அரசாங்கம் பிரிவினை வாத தீய சக்திகள் குறிப்பாக தனி தமிழ்நாடு கேட்கும் தமிழ் தேசிய இயக்கங்கள், திருமாவளவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
பழனியில் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அது ரவுடித்தனமான செயல். அந்த தீய சக்திகளை செயல்பட அனுமதித்து விட்டு, தேசபக்த சக்திகளை நசுக்க பார்க்கின்றீர்கள். அது உங்களால் முடியாது. ஒவ்வொரு முறையும் தோற்றுதான் போவீர்கள். தற்போது 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றுள்ளது. இனிமேலாவது திருந்துங்கள் என்றார்.
காவல்துறை இன்று பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. தீய சக்திகளின், பிரிவினை வாதிகளின், பயங்கரவாதிகளின் ஏவல் துறையாக காவல் துறை மாறிக் கொண்டிருக்கிறது. நான் ஓராயிரம் முறை சொல்லுவேன், பி.எஃப்.ஐ தேசத்துரோகிகள். அதனால்தான் அவர்கள் தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒரே நாளில் 19 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வன்முறை வாதிகள், பயங்கரவாதிகள்.
ராகுல் காந்தி ஒரு சாதியை இழிவாக பேசினார் என்பதால் அந்த சாதியை சேர்ந்த ஒரு நபர் வழக்கு தொடுத்தார். அதற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ராகுல் காந்தி கொள்ளிக் கட்டையால் தலையை சொறிந்து கொள்கிறார். பாஜகவிற்கு பெரிய பிரசார பீரங்கியே ராகுல் காந்திதான். ராகுல் காந்தி பேசி விட்டு வந்தால் பத்தாயிரம் ஓட்டுக்கள் எங்களுக்கு அதிகமாக தான் விழும்.
பாஜக தலைவர் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர்கள் 17 பேரும் நீதிமன்றத்தில் அபிவிட் தாக்கல் செய்யட்டும். அண்ணாமலை சொல்லியது அனைத்தும் பொய். இந்த சொத்து எதுவும் எங்களுடையது இல்லை என தாக்கல் செய்யட்டும். அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவர், அவர் வெளியிட்டது பா.ஜ.க கட்சியின் கருத்துதான். தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருக்கிறது. ஆளுநர் கையில் தகவலும், தரவுகளும் இருக்கின்ற காரணத்தால் பேசுகிறார். ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என தெரிவித்தார்.
Exit mobile version