Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Happy Engineers Day! பொறியாளர் தினம்!

நாம் பயன்படுத்தும் குண்டூசி தொடங்கி கணிப்பொறி வரை, அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சிறு சிறு பொருட்கள் முதல் பயணிக்கும் சாலைகள், குடியிருக்கும் வீடுகள், பறக்கும் விமானம், மிதக்கும் கப்பல் ஆகியவை வரை தயாரிக்கப்படுவதன் பின்னணியில் ஒரு பொறியாளரின் பங்களிப்பு இருக்கும். உயிர் காக்கும் பல மருத்துவ உபகரணங்களும் இவற்றில் அடக்கம்.

இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை நாடு முழுவதும் ஆண்டுதோறும் ‘இந்தியாவின் பொறியியலாளர் தின’மாக கொண்டாடப்படுகிறது.

பிறப்பு மற்றும் கல்வி:
இவர் கர்நாடக மாநிலம், சிங்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி கிராமத்தில் 1860ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் பிறந்தார். 15 வயதில் தந்தையை இழந்த விஸ்வேஸ்வரய்யா, தன்னுடைய ஆரம்ப கல்வியை சொந்த ஊரிலும், உயர் கல்வியை பெங்களூரிலும் பயின்றார். 1881ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் புனே அறிவியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பயின்றார்.

சிறந்த பொறியாளர்:
தன்னுடைய பொறியியல் படிப்பை முடித்த பிறகு மும்பை பொதுப்பணித் துறையில் பொறியாளராகவும் பின்னர், இந்தியப் பாசன ஆணையத்திலும் பணியை தொடங்கிய அவர், தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து, 1903-ல் புனேவிலுள்ள ‘கடக்வசல’ நீர்தேக்கத்தில் அதை செயல்படுத்தி வெற்றி கண்டார். வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வெள்ளத் தடுப்பு அமைப்புமுறையை உருவாக்கினார். துறைமுகங்களைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கத் தடுப்பு அமைப்புகளை வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய நீர்த்தேக்க அணைகளுள் ஒன்றாகக் கருதப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் காவிரியின் குறுக்கே கட்டினார். திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலை அமைக்கவும், மைசூருக்கு அருகில் உள்ள சிவசமுத்திரத்தில் நீர் மின்உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார்.

பிற பணிகள்:
1912-ல் மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார். ஸ்ரீஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக், மைசூர் பல்கலைக்கழகம், சந்தன எண்ணெய் நிறுவனம், உலோகத் தொழிற்சாலை, குரோமிய வழி பதனிடுதல் தொழிற்சாலை, பத்ராவதி இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலை, கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம், பெங்களூர் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். 1923-ல் இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். 1934-ல் ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற நூலை எழுதினார்.

விருதுகளும்அங்கீகாரங்களும்:

இறப்பு:
1918ஆம் ஆண்டு திவான் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தன்னுடைய ஓய்வுக்குப் பிறகும் கடுமையாக உழைத்தார். இந்தியப் பொறியியலின் தந்தை’ எனப் போற்றப்பட்ட எம்.விஸ்வேஸ்வரய்யா 1962ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 101-வது வயதில் காலமானார்.

இவரது நினைவைப் போற்றும் வகையில் இவரது பிறந்த தினம், ‘இந்தியாவின் பொறியியலாளர் தின’மாகக் கொண்டாடப்பட்டு வருகிறது…

Exit mobile version