ஹாப்பி நியூஸ்.. பெண்களுக்கு நடமாடும் “She Toilet” வாகனம் அறிமுகம்!
இன்றைய நவீன காலத்தில் வெளியில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.பல பெண்கள் வேலைக்காக சொந்த ஊரில் இருந்து முக்கிய நகரங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது.தமிழகத்தில் சென்னை,கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்கள்,ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தான் அதிகம் மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பொது இடங்களில் அமைந்துள்ள கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் பல்வேறு பாதிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பொதுகழிவறைகள் தரமற்றதாகவும்,பாதுகாப்பது குறித்த பிரச்சனை இருப்பதாகவும் பெண்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு “நடமாடும் ஒப்பனை அறை” (She Toilet) வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் கழிவறை மட்டுமன்றி முகம் பார்க்கும் கண்ணாடி,சானிட்டரி நாப்கின்,கை கழுவும் திரவம்,உடை மாற்றுவதற்கான அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை என பெண்களுக்கு தேவையான அனைத்தும் இடம் பெற்றுள்ளன.
இந்த நடமாடும் ஒப்பனை அறை வாகனம் முதற்கட்டமாக மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மண்டலத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் மொத்தம் 15 மண்டலங்களுக்கு 15 நடமாடும் ஒப்பனை அறை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த She Toilet திட்ட தொடக்க விழா ரிப்பன் மாளிகையின் வளாகத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு She Toilet வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிர்பயா திட்ட நிதியின் கீழ் சுமார் 4.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதற்கட்டமாக 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களின் பொது போக்குவரத்து அமைந்துள்ள இடங்களில் அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.