உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!!
தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீதர் காலனியில் பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் அமலாக்க துறை அதிகாரிகள் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அடுத்து சென்னை மற்றும் விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அமைச்சரின் மகனின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக எதுவும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்திலும் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் உள்ளே வருவோர் தீவிர கண்காணிப்புக்கு பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் மூத்த அமைச்சரான பொன்முடியின் வீட்டில் நடைபெறும். இந்த சோதனையால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் உள்ள குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த சோதனை குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் “அமலாக்கத்துறை சோதனைக்கு ஏதேனும் முகாந்திரம் இருக்கும். ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது. உப்பை தின்றவர்கள் தண்ணீர் கட்டாயம் குடித்தே தீர வேண்டும். அமலாக்கத்துறையின் சோதனை இறுதியிலே முழு விவரம் தெரியவரும். பெங்களூரு எதிர்க்கட்சி கூட்டத்திற்கும், அமலாக்கத்துறை சோதனைக்கும்எந்தவித சம்பந்தம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.