சென்ற ஏழாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றிலிருந்து பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த சமயத்தில் தமிழக அரசு சார்பாக நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் பேனர்ஜி அமர்வு புதிதாக ஆட்சியில் அமர்ந்து இருக்கின்ற தமிழக அரசு பல துறை அதிகாரிகளை மாற்றம் செய்து வருகின்றது. இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் வைத்து சுகாதாரத்துறை செயலாளரை மட்டும் மாற்றாமல் நோய்தொற்று பணிகளை மேற்கொண்டு வருவது திருப்தி தரும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறது.
அதோடு சுகாதாரத் துறை செயலாளராக இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக இதற்கு முன்னர் பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டார். 2020 ஆம் ஆண்டு மே ஜூன் மாதங்களில் நோய்த்தொற்று அதிகமானதை தொடர்ந்து மீண்டும் ராதாகிருஷ்ணனை சுகாதாரத் துறைச் செயலாளராக தமிழக அரசு நியமனம் செய்தது. அன்று முதல் தற்சமயம் வரையில் மருத்துவமனைகளில் ஆய்வு செய்வது போன்ற தடுப்புப் பணிகளை மிகத்தீவிரமாக ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.