சூடு பிடிக்கும் சர்ச்சை பேச்சு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – சேகர்பாபு பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கவர்னரிடம் மனு!!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்து மத மக்களின் உணர்வுகளை அமைச்சர் உதயநிதி கூறிய கருத்து புண்படுத்தி உள்ளது என பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.
அதுமட்டுமில்லாமல் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்பட 262 பேர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். மேலும் அமைச்சர் உதயநிதி மீது உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூரில் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதிக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த பாஜக நிர்வாகிகள் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் தமிழகத்தின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும், எதிராகவும், சனாதனத்தை பின்பற்றும் அனைத்து மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதன் காரணமாக தமிழக முழுவதும் பாஜக சார்பில் அமைச்சர் உதயநிதி மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது வரை அவர்மீது எந்த இடத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் அமைச்சர் உதயநிதி சனாதன எதிர்ப்பு குறித்து பேசியபொழுது அந்த மேடையில் அமர்ந்திருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அமைச்சராக பதவி ஏற்கும் போது எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கவர்னர் அவர்கள் தமிழக டிஜிபிக்கு வலியுறுத்த வேண்டும் என பாஜக சார்பில் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.