கனமழை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலானது கரையை கடந்த நிலையில் தமிழகம்,காரைக்கால், புதுச்சரி பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.அதனை தொடர்ந்து கடந்த இரண்டு மூன்று நாட்களாக பள்ளிகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.
இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகின்றது.அவை அடுத்த இரண்டு நாட்களில் இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனால் நாளை தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைவரை பெய்யக்கூடும்.அதனை தொடர்ந்து டிசம்பர் 23,24 அதவாது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நாளை குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா,தமிழக கடலோரப் பகுதி மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.அதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.