டிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!
கடந்த மாத இறுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஆட்டம் கண்டுவிட்டு ஓய்ந்து விட்டது. இந்த புயலில் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. மழை வெள்ள நீர் வடிந்து இந்த மாவட்ட மக்கள் தற்பொழுது மெல்ல மெல்ல இயல்பு வாழக்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்த புயலின் தாக்கமே இன்னும் தணியாத சூழலில் தமிழகத்திற்கு இந்த மாத இறுதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி வருகின்ற 20 ஆம் தேதி வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக வருகின்ற கிறிஸ்துமஸ்(டிசம்பர் 25) வரை தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டி இருக்கும் மாலத்தீவு பகுதிகளில் உருவாகி இருக்கும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற 20 ஆம் தேதி வங்கக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதால் இந்த மாத இறுதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.