மழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் நேரில் ஆய்வு!

0
138

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக, பாதிக்கப்பட்ட இருக்கின்ற பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல் இரவு பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பிடிசி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதோடு அந்த பகுதி பொதுமக்களிடம் பாதிப்புகளின் விவரங்களை கேட்டறிந்து அவற்றை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

அதன்பிறகு கனமழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு வரதராஜபுரம் ஊராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட இருக்கின்ற முகாமிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அங்கே தங்கி இருக்கக்கூடிய பொது மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

அதேபோல பரத்வாஜ் நகர், பிடிசி குடியிருப்பு மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய இடங்களிலும் மிக அதிக மழையின் காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் சுமார் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருந்தால் மோட்டார் பம்புகள் மூலமாக அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு தற்சமயம் மழைநீர் வடிந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

அதோடு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பைபர் படகுகளில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் இருக்கின்ற நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளை உணவும், தேவையான அடிப்படை வசதிகளும், செய்யப்பட்டு இருக்கிறதுகாஞ்சிபுரம் மாவட்டம் பகுதிகளில் தற்போது இருக்கக்கூடிய 25 முகாம்களில் சுமார் 930 நபர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் சீரமைப்பு பணிகளை துரிதமாக முன்னெடுக்க அலுவலர்களுக்கு உத்தரவை பிறப்பித்தார் அதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

அதன்பிறகு தாம்பரம் மாநகராட்சி வாணியன் குளம் இரும்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகள் தொடர்பான விவரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட வருவதை அறிந்த முடித்து ஜோதி நகர் பகுதியைச் சார்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியை பார்வையிட வேண்டும் என்று வைத்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட ஜோதி நகரையும் அங்கே தங்கியிருக்கக் கூடிய மழை நீரை துரிதமாக அகற்றிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். பொதுமக்களிடம் தேவைப்படும் நிவாரண உதவிகள் தொடர்பாகவும் அவர் கேட்டு அறிந்திருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மிகவும் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து 11 துறைகளைச் சார்ந்த அலுவலர்களை உள்ளடக்கிய 31 குழுக்களும், துணை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் நிலையில், எட்டு வட்டங்களுக்கு வட்ட அளவிலான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் உள்ளிட்டவற்றை போர்க்கால அடிப்படையில் உத்தரவிட்டு போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அதோடு கனமழையின் காரணமாக, அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளான முடிச்சூர், தாம்பரம், இரும்புலியூர், கூடுவாஞ்சேரி, தாழம்பூர், பெரும்பாக்கம், ஊரப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிக்க துணை வட்டாட்சியர்கள் நிலையில், சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு நிவாரண பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய 44 முகாம்களில் சுமார் 2313 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு இருக்கிறது.

இந்த ஆய்வின்போது ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன், சட்டசபை உறுப்பினர் எஸ் ஆர் ராஜா, செல்வப்பெருந்தகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரும், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது