ஆயுள்தண்டனை கைதியான மோகன்தாஸ் தனது சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி!!

0
136
#image_title

மதுரை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ள மோகன்தாஸ் தனது சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மே 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது சகோதரர் மோகன்தாஸ். இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் எனது மற்றொரு சகோதரர் நாராயணசாமி, திடீரென இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க மோகன்தாசுக்கு அவசர பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் ஆயுள்தண்டனை கைதி மோகன்தாஸ் பங்கேற்கும் வகையில் ஒரு வாரம் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், மோகன்தாசுக்கு 18-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை பரோல் வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.