பள்ளிகளில் அதிக கட்டணமா? கவலை வேண்டாம் தாரளமாக புகார் தெரிவிக்கலாம்! – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி!
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேற்று திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர், தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் முறையில் செய்த செய்முறைப் பயிற்சிகள் மற்றும் அவர்கள் தயாரித்த உபகரணங்களை பார்வையிட்டார். மேலும் அதில் நன்றாக உள்ளவற்றை பாராட்டியும் பேச செய்தார்.
தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக அரசுப்பள்ளி என்றால் வறுமை நிலை என்று இல்லாமல் பெருமை என்கிற நிலையை தற்போது பார்க்க முடிகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க இருகரம் கூப்பி அழைப்பு விடுக்கிறேன். இங்கு கல்வி அதிகாரிகள் பேசும்போது சி.பி.எஸ்.இ. படித்து வந்த மாணவர்கள் கூட அரசு பள்ளியில் சேர்வதற்கு வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவித்தனர். மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் காரணத்தினால் வகுப்பறைகள் கூடுதலாக அமைக்க வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்களிடம் ஏற்கனவே ஆலோசனை நடத்திய நிலையில், வரும் 1-ந்தேதி பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் ஒன்று சென்னையில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நான் ஏற்கனவே முடித்து வைத்து உள்ள மாவட்ட அளவிலான ஆய்வு விவரங்களை ஒப்படைக்க தயார் செய்து வைத்து இருக்கிறேன்.பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரப்படி ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதே நடைமுறையைத்தான் தற்போதும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வாட்ஸ் அப், இ-மெயில், மற்றும் ஹெல்ப் லைன் எண்களில் சில பெற்றோர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
அதுபற்றி அவர்களிடம் திரும்பவும் கேட்டால் நீங்களாக போய் ஆய்வு நடத்தி கொள்ளுங்கள் என்று சரியாக பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். அதிக கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் பற்றி பெற்றோர்கள் தைரியமாக வந்து புகார் கொடுத்தால் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். இதற்காக தனியார் பள்ளிகளில் ஆய்வும் மேற்கொள்ளப்படும்.
மேலும் தொடர்ந்து நீட் தேர்வின் பாதிப்புகள் பற்றி அறிய நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியின் பரிந்துரைப்படி நீட் தேர்வு தொடர்பாக முதல் அமைச்சர் முடிவெடுப்பார். இருந்தாலும் அதற்கு முன்பாக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கிறார். அதே போல் கல்வி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை பொறுத்தவரை தற்போது 20 சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதனை 1 முதல் 5, 6 முதல் 8, 9 மற்றும் 10, மேல்நிலைக் கல்விக்கு தனியாக என பிரித்து ஒளிபரப்பு செய்யலாமா? எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.