தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி
கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோவிலில் பக்தர்கள் அர்ச்சகர்கள் தட்டில் போடும் பணத்தை பறிக்கும் நோக்கில் உண்டியலில் போட அறநிலையத்துறை அதிகாரிகள் வற்புறுத்துவது குறித்து பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பழனி முருகன் கோவிலுக்கு அதைச்சுற்றி 30 க்கு மேற்பட்ட உப கோவில்கள் உள்ளன. அதில் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் அமைந்துள்ள குழந்தை வேலப்பர் கோவிலும் ஒன்றாகும்.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அர்ச்சகர்கள் தட்டில் காணிக்கை செலுத்தி வருவது வழக்கம். ஆனால் சமீப காலமாக அர்ச்சகர்கள் தட்டில் பணம் செலுத்துவதை அறநிலையத்துறை அதிகாரிகள் தடுப்பதாகவும், அதை உண்டியலில் போட வற்புறுத்தி வருவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவ்வாறு உண்டியலில் பணம் செலுத்தாதவர்களை கண்காணித்து அவர்களிடம் கெடுபிடி காட்டுவதாகவும் கூறுகின்றனர். இதற்கான தனியாக 3 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் அங்கு சி.சி.டி.வி வைத்து கண்காணிப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவர்களாகவே விரும்பி அர்ச்சகர்கள் தட்டில் பணம் போடுவதை கண்காணித்து அர்ச்சர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி அவர்களை துன்புறுத்தும் அவலம் தொடர்கிறது.
மேலும் பக்தர்கள் பணத்தை அங்குள்ள உண்டியலில் இடவும், அவர்கள் POS இயந்திரம் வழியாக நன்கொடைகளை செலுத்தவும் அறநிலையத்துறை அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
மேலும் கோவிலில் அன்றாட பூஜை மற்றும் அபிஷேகம் குறித்த அறிவிப்பு பலகைகள் கூட எதும் இல்லாத நிலையில் அதிகாரிகள் இப்படி கட்டாயபடுத்தி வருவது பக்தர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.