இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு! ஏல தோட்ட தொழிலாளர்களுக்கும் ஓர் நாள் வேலை பாதிப்பு!
கம்பம், போடி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ஏலத்தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற்ற பந்த் காரணமாக பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது
உச்சநீதிமன்றத்தின் சுற்றுச்சூழல் மண்டலப்பகுதி உத்தரவை திரும்பப் பெறக் கோரி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் :-கேரள காங்கிரஸ் தலைமையிலான UDF (ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பினர்) முழு அடைப்பு போராட்டத்தால் சுற்றுலா தளமான குமுளியில் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு தமிழக எல்லையில் பகுதியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .
வெப்பமயமாதலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து சூரிய கதிர்கள் சுட்டெரித்து வரும் நிலையில், காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக (Buffer Zone) அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவினால் கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தேக்கடி மற்றும் குமுளி பகுதிகளில் எந்த ஒரு கட்டுமான தொழிலையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் இருக்கும் கட்டிடங்களை பராமரிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வணிகர்கள் மிகவும் பாதிக்கப்படுவர் என போராட்டக்காரர்கள் கூறினர்.
உச்சநீதிமன்றத்தின் சுற்றுச்சூழல் மண்டலப்பகுதி (Buffer Zone) உத்தரவு இடுக்கி மாவட்ட மக்களை பெரிதும் பாதிக்கும் எனவும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் திரும்பப் பெறக்கோரியும் , இடுக்கி மாவட்டத்தில் இன்று காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் (ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பினர்) முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
காலை ஆறு மணிமுதல் மாலை ஆறுமணிவரை நடைபெற்றது, இந்த முழு அடைப்பில் பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை, வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைத்து காணப்பட்டது. வாகனங்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர் .ஆனால் பால், பேப்பர், மருத்துவமனை, சுப, துக்க காரியங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் அனுமதித்து வருகின்றனர்.
உள்ளூர் விடுமுறை :
முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு, இடுக்கி மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று கம்பத்திலிருந்து கேரளப்பகுதியான கட்டப்பனை, நெடுங்கண்டம், ஏலப்பாறை பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் வேறு வழித்தடத்தில் மாற்றிவிடப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல இன்று கம்பம், போடி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ஏலத்தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற்ற பந்த் காரணமாக பணிக்கு செல்ல முடியாத சூழல் உண்டானதும் குறிப்பிடத்தக்கது.
இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரள மற்றும் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.