Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொளுத்தும் கோடை வெயில்..!! பொதுமக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்..!! நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!

கோடை வெயிலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், தற்போது இருந்தே அரசியல் கட்சிகள் தங்கள் கள நடவடிக்கையை தொடங்கிவிட்டன. அந்த வகையில், புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய்யும் பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், தற்போது திமுகவை நேரடியாகவே விமர்சிக்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் தான், தவெக நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது, கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்குமாறு விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படிமாநகரம், நகரம், ஒன்றியம், வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்.

நம் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்களின் தாகம் தணிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக தாங்கள் அமைத்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என்பதை தினந்தோறும் தவறாமல் கண்காணிக்க வேண்டும்” என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version