எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி!
பாஜக தன்னுடைய தனிப் பெரும்பான்மையை இழந்து ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளை நம்பியுள்ள நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் அவர்கள் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று கிண்டலாக பேட்டி அளித்துள்ளார்.
ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் தேசிய அளவில் பாஜக கட்சி 543 தொகுதிகளில் 240 தொகுதிகளை வென்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக கட்சி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில் பாஜக கட்சியின் இந்நிலைமையை கண்டு அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அவர்கள் கிண்டலாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அவர்கள் “அதிமுக கட்சி பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்காததற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான் என்று கூற முடியாது. பிரதமராக நரேந்திர மோடியாகவும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வர வேண்டும் என்று நாங்கள் தெளிவான முடிவில் இருந்தோம். எங்களுடைய இந்த முடிவை பாஜக கட்சி தலைவர்களும், தொண்டர்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் எங்களுடைய இந்த முடிவில் ஒரே ஒரு தலைவர் மட்டும் தான் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தார். அவர் யார் என்பது உங்களுக்கே தெரியும். அவர் அண்ணாமலை அவர்கள் தான்.
அண்ணாமலை அவர்களின் அரசியல் அனுபவக்குறைவு வந்து எதிர்க்கட்சிகளுக்கு பெரிய இழப்பை கொடுத்துள்ளது. அண்ணாமலை அவர்கள் பொறுமையாகவும் நாவடக்கத்தோடும் இருந்திருந்தால் மாற்றம் வந்திருக்கும்.
நேற்று வரை தனிப் பெரும்பான்மையுடன் இருந்த பாஜக கட்சி இந்த தேர்தலில் தனிப் பெரும்பான்மையை இழந்துள்ளது. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்ற நிலைமைக்கு பாஜக கட்சி சென்றுள்ளது. தற்பொழுது பாஜக கட்சி ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயடு மற்றும் நிதிஷ் குமார் ஆகிய இரண்டு பேரின் தயவை நாடியுள்ளது.
நாங்கள் பாஜக கட்சியை எதிரியாக பார்த்தது இல்லை. பார்க்கவும் மாட்டோம். ஆனால் பாஜக கட்சி எங்களை எதிரியாக பார்க்கின்றது. எங்களுக்கு ஒரே எதிரி அது திமுக கட்சி மட்டும் தான்.
ஊர் ரெண்டு பட்டால் யாருக்கோ கொண்டாட்டம் என்பது போல நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் திமுக கட்சிக்கு சாதகமாகிப் போனது. உணர வேண்டியவர்கள் உணர்ந்திருந்தால் இந்நேரம் அதிமுக கூட்டணி 33க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி இருக்கும்” என்று கூறினார்.