டிரைவிங் லைசென்ஸ் வேணுமா ? இனி ஆர்டிஓ ஆபிஸை சுற்றவேண்டாம், இதை மட்டும் செய்தால் போதும்!

0
215

டிரைவிங் லைசென்ஸ் என்றாலே பலருக்கும் மனதிற்குள் மிகப்பெரிய சலிப்பு வரும், அதற்கு முக்கிய காரணம் ஒரு டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக பல நாட்கள், பல மணி நேரங்கள் ஆர்டிஓ அலுவலகத்தை சுற்றி வளைத்து சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான படிநிலைகளை நினைத்து பலரது மனதிலும் பயம் இருந்துகொண்டே தான் இருக்கின்றது. ஆனால் தற்போதுள்ள புதிய விதியின்படி டிரைவிங் லைசென்ஸ் பெறவேண்டுமென்றால் நீங்கள் இனிமேல் அடிக்கடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை மற்றும் நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமுமில்லை.

தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. இந்த விதியின்படி, நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக டிரைவிங் ஸ்கூலுக்கு செல்ல வேண்டும். எந்த டிரைவிங் ஸ்கூலுக்கு சென்றும் நீங்கள் உங்கள் பெயரை பதிவு செய்யலாம், இது தவிர அந்த டிரைவிங் ஸ்கூலில் இருந்தும் நீங்கள் சான்றிதழையும் பெற்று கொள்ளலாம். இதனை நீங்கள் செய்வதால் ஆர்டிஓ அலுவலகத்தில் டிரைவிங் டெஸ்ட் செய்ய வேண்டியதில்லை.

சோதனை இல்லாமல் டிரைவிங் லைசென்ஸ் பெற, அங்கீகரிக்கப்பட்ட டிரைவிங் ஸ்கூலில் முறையாக பயிற்சி பெற வேண்டும். இந்த இடங்களில் பயிற்சி முடித்த பிறகு, அவர்கள் நடத்தும் தேர்விலும் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும். நீங்கள் தேர்ச்சி பெற்ற பிறகு உங்களுக்கு அந்த மையத்தால் சான்றிதழ் வழங்கப்படும், இந்த சான்றிதழின் அடிப்படையில் உங்களுக்கு ஆர்டிஓ மூலம் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும்.