நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் விழுந்த மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பேரூரில் இன்று நடைபெற்றது.
கோவை மாவட்டம் கோவை புதூர் தீயணைப்பு நிலைய அலுவலர், ரவிச்சந்திரன் மற்றும் கோவைப்புதூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய பணியாளர்களுடன் பேரூர் பெரியகுளத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்புப்பணி ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மேலும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் குளத்தில் தவறி விழுந்து உயிருக்காக போராடும் நபரை உயிருடன் மீட்பது எப்படி என்றும், தற்போது வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் அதிகமாக பெய்து வரும் நிலையில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்புடன் இருப்பது எப்படி எனவும் விளக்கம் அளித்தனர்.
தீயணைப்பு நிலைய பணியாளர்கள் பொதுமக்களுக்கான விழிப்புணர்வை தகுந்த உபகரணங்களுடன் விளக்கி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர், மேலும் தண்ணீரில் யாரும் தவறி விழுந்து விட்டால் உடனடியாக அவர்களுக்கு என்னென்ன முதலுதவி செய்ய வேண்டும், என்னென்ன உதவிகளை செய்தால் அவர்களை காப்பாற்ற முடியும் எனவும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கபட்டது.