நவகிரகங்களில் ஒருவராக கருதப்படும் சுக்கிர பகவானை அசுர குரு என்றும், சுக்கிராச்சாரியார் என்றும் கூறுவது உண்டு. இளமை, அழகு, வசீகரம், மகிழ்ச்சி, காதல் வாழ்க்கை, வசதி போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக இவரே போற்றப்படுகிறார். ஒருவரின் உலகியல் சார்ந்த ஆசைகள், வாழ்க்கை ஆகியவற்றிற்கு இவரே காரண கர்த்தா என்பதால் இவரது அருளை பெறுவது அவசியமாகும்.
ஆகையால் வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவான் வழிபாடு நல்ல சிறப்பான பலனை தரும். சாஸ்திரப்படி சுகபோகமான வாழ்க்கை, செல்வ செழிப்பு, பணம், வசதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக இருப்பவர் தான் சுக்கிர பகவான்.
ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சாதகமான இடத்தில் சுக்கிரன் பலம் பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ இருந்தாலும் அவர்கள் உயர்வான நிலையை அடைவார்கள். அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, சுகபோகம் மற்றும் வசதி வாய்ப்புகள் என எதற்கும் குறைவே இருக்காது.
இது போன்ற மகிழ்ச்சியாக, வசதியாக இருப்பவர்களை கூட கிண்டலாக சுக்கிர திசை அடித்து விட்டது என சொல்வார்கள். மேலும் சுக்கிர பகவானின் நிலை பலவீனமாகவோ அல்லது பாவ கிரகங்களுடன் சேர்ந்த நிலையிலோ இருந்தால், அவர்களது வாழ்க்கையில் பல விதங்களிலும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.
அன்றாட வாழ்க்கையை நடத்துவதே போராட்டமாக இருக்கும். அப்படி வாழ்க்கையில் பல விதமான துன்பங்களை, போராட்டங்களை சந்திப்பவர்களின் ஜாதகத்தில் சுக்கிர பகவானின் நிலை பலவீனமாக இருக்கும். வெள்ளிக்கிழமை அன்று சில எளிய பரிகாரங்களை செய்தால், சுக்கிரனின் அருளால் வாழ்க்கையே மாறும்.
ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை பலவீனமடைந்து இருப்பவர்கள், வெள்ளிக்கிழமை தினங்களில் வெள்ளை நிறத்தில் உள்ள பால், அரிசி போன்ற பொருட்களை தானம் கொடுப்பது சிறப்பு மிக்கது. குடும்பத்தில் கணவன் மனைவி பிரச்சனை ஏற்படாமல் இருக்க, வெள்ளிக்கிழமை நாட்களில் தீப தூவ ஆராதனை காட்டி, வீட்டை எப்பொழுதும் நறுமணமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சுக்கிர பகவானுக்கு உரிய வெள்ளை நிறத்தை அடிக்கடி அணிந்து கொள்வதும் சிறப்பை தரும். அதேபோன்று சுக்கிரனுக்குரிய அதிர்ஷ்ட கல்லான வைரத்தை சிறிய அளவாவது அணிந்து கொள்வது மேலும் சிறப்பை தரும்.
வெள்ளிக்கிழமை வழிபாடு:
தொடர்ந்து மூன்று வார வெள்ளிக்கிழமைகளில் அகல்விளக்கு அல்லது வெள்ளி விளக்கில் நெய் ஊற்றி விளக்கை ஏற்றுங்கள். முடிந்தால் உங்கள் வீட்டில் துளசி செடியையும், அதற்கு அருகில் மாதுளை செடியையும் வைத்து வளருங்கள். ஏனென்றால் துளசி செடியும், மாதுளை செடியும் அருகருகே இருக்கக்கூடிய இல்லங்களில், பணக்கஷ்டம் என்பது வராது. மேலும் குடும்ப ஒற்றுமையும் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை தினங்களில் பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு, அபிஷேகம் செய்வதற்கு தேவையான பசும் பாலை வழங்கிட பண வரவு உண்டாகும். மேலும் அந்த தினத்தில் தாயாருக்கு பச்சை வலையல்களை அணிவிப்பதும் சிறப்பை தரும்.