60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று! வலுபெறுமா காற்றழுத்த தாழ்வு பகுதி?
காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக மாற உள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கடந்த வாரம் மாண்டஸ் புயல் ஒரு வழியாக கரையை கடந்த நிலையில் மீண்டும் தெற்கு வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற போவதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பான தகவலில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று மேற்கு- தென்மேற்கு திசை வழியே நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர இருக்கிறது.இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-12-2022 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும். 25-12-2022 தென் தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை உண்டு.கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி மற்றும் ராமநாதபுரத்திலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.லேசான மழையும் பெய்யலாம். இன்று தென்மேற்கு வங்ககடல் மற்றும் இலங்கை சுற்றி உள்ள பகுதிகளில் 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரையிலும், இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் 23- 12-2022 மற்றும் 24-12-2022 அன்று தென்மேற்கு வாங்க கடல் பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 45-55 கிலோமீட்டர் வேகத்திலும் சில நேரங்களில் 65 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளதாக மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.