என் கருப்பு பணத்தை மாற்றிவிட்டு தருகிறேன்! நட்பாக பழகி தொழிலதிபர்களிடம் பல லட்சங்களை சுருட்டிய பெண்!
தற்போதெல்லாம் யாரை நம்புவது, யாரை நம்ப வேண்டாம் என்று கூட தெரிய மாட்டேன் என்கிறது. ஏனெனில் நட்பு ரீதியில் பலரும் பாசமாகவும், நட்பாகவும் பழகி விட்டு நம்மிடையே இருந்து நம்பிக்கை உட்பட பல விஷயங்களை ஏமாற்றி விடுகின்றனர். இது போல் பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களிடம் ரூபாய் 19 லட்சத்தை மோசடி செய்த பெண் மீது தற்போது போலீசார் வழக்குபதிவு ஒன்றை செய்துள்ளனர்.
ராமநகர் மாவட்டத்தில் கனகபுராவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் உள்ளார். இவர் பெங்களூரில் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கமலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியது. அந்த தொழிலதிபரிடம் கமலா தனது தந்தை ஊட்டியில் டீ எஸ்டேட் வைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் எனக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான கருப்பு பணம் கேரளாவில் சிக்கி உள்ளது என்றும், அந்த பணத்தை விடுவிக்க அங்குள்ள அதிகாரிகள் 7 லட்சம் வரை லஞ்சம் கேட்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த தொழிலதிபரிடம் இதை நீங்கள் தந்து உதவுகிறீர்களா? என்று கேட்க அவரும் அந்த முழு ரூபாயையும் அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் வீட்டின் உள் அலங்காரம் செய்ய வேண்டும் என்றும், வேறு வீட்டிற்கு செல்ல முன்பணம் வேண்டும் என்றும் பலவிதங்களிலும் அவரிடம் 6 லட்சம் வரை வாங்கியுள்ளார். இதையடுத்து அவர் தொழில் அதிபருடன் பேசுவதை குறைத்துக் கொண்டதோடு, தொழிலதிபரின் கைபேசி எண்ணையும் பிளாக் செய்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதேபோல் சம்பிகேஹள்ளியில் வசிக்கும் மற்றொரு தொழிலதிபர்களுடனும் திருமண தகவல் இணையதளம் மூலம் பழகிய அந்த பெண், அவரிடமும் பல காரணங்களை கூறி 6 லட்சம் வரை அவரிடமிருந்து வாங்கியுள்ளார். மேலும் அவருடன் பேசுவதை தவிர்த்தும் வந்துள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு தொழிலதிபர்களிடம் அந்த ஒரே பெண் மோசடி செய்துவிட்டதாக சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.