இனி வீட்டில் நீங்களே கொரோனா டெஸ்ட் செய்யலாம்! புதிய டெஸ்ட் கிட் CoviSelf-க்கு ICMR அனுமதி
கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.அதே நேரத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் பெட் கிடைக்காமல் ஆம்புலன்சில் காத்திருந்து மரணித்த சம்பவமும் ஆங்கங்கே நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் இந்த கொரோனா பரவலுக்கு முக்கியமான காரணமாக மக்களின் அலட்சியமே என்றும் கூறப்படுகிறது.நாட்டிலிருந்து கொரோனா பாதிப்பு முழுவதும் நீங்காத சூழலில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சாதரணமாக வெளியில் செல்ல ஆரம்பித்தனர்.கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் முறையான பரிசோதனை செய்து கொள்ளாமல் தவிர்த்து வந்ததும் அதிக பரவலுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே டெஸ்ட் செய்து கொள்ளும் வகையில் CoviSelf என்ற புதிய கிட்டிற்கு ICMR அனுமதியளித்துள்ளது.கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் இந்த CoviSelf டெஸ்ட் கிட்டை பயன்படுத்தி தங்களை பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Rapid Antigen Test செய்யும் இந்த CoviSelf டெஸ்ட் கிட்டை Mylab Discovery Solutions என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த டெஸ்ட் கிட்டானது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.இந்த டெஸ்ட் கிட்டை பயன்படுத்த மருத்துவ பணியாளர்கள் யாரும் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.அதே போல இந்த டெஸ்ட் கிட்டில் எடுக்கப்பட்ட டெஸ்டில் நெகடிவ் ரிசல்ட் வந்த பின் கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் கிட்டுடன் டெஸ்டிற்கு தேவையான அனைத்து உபகரணங்கள்,பயன்படுத்தும் வழிமுறைகள்,பயன்படுத்திய பின் செய்ய வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.மேலும் தற்போது உள்ள டெஸ்ட் முறை போல இல்லாமல் அசவுகரியத்தை ஏற்படுத்தாத வகையில் இதை வடிவமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த டெஸ்ட் கிட் மூலமாக வெறும் 15 நிமிடங்களில் ரிசல்ட்டை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
இந்த டெஸ்ட் கிட்டின் விலையானது 250 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆர்டர் செய்தால் ஒரு சில தினங்களில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த நிறுவனம் அளித்துள்ள மொபைல் ஆப்பின் வழியாக தங்களில் டெஸ்ட் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.