எல்லையில் போராட்டம் நடத்தும் இவர்கள் விவசாயிகள் என்றால் அத்தியாவசிய பொருட்கள் எப்படி சந்தைக்கு வரும்? – பா.ஜ.க எம்.பி
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் வலிமையோடு பல மாதங்களாக நீடித்து வருகின்றது. இது உலக மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களை விவசாயிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்த நிஜமாகவே துணிவு நிறைய வேண்டும் அல்லவா? பத்து மாதங்களாக அவர்களது போராட்டத்திற்கு செவி சாய்ப்பது போல் மத்திய அரசு நடந்து கொண்டாலும், அதற்கான தீர்வை அவர்கள் இன்னும் எட்டவே இல்லை.
வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்த நிலையிலலும், மூன்று சட்டங்களையும் முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தெரிவிப்பதன் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட போராட்டம் முடிவுக்கு வருவதாக இல்லாமல் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கின்றது.
இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே உள்ளது. இந்தப் போராட்டம் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் அதிகாரியின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை என்றும் ஒரு பாஜக எம்பி தெரிவித்துள்ளார்.
அவர் உத்தரபிரதேச மாநிலம் பஹரிட்ச் தொகுதி பா.ஜ.க. எம்.பி. அக்ஷய்வர் லால் கவுண்ட் ஆவார். மேலும் இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் விவசாய தலைவரான ராகேஷ் திகாய்த் ஆயுதமேந்திய கொள்ளை கும்பலை சேர்ந்தவர் என்றும், விவசாயிகளால் எந்தப் போராட்டமும் நடத்தப் படவில்லை.
மேலும் இங்கே போராடுபவர்கள் விவசாயிகளே அல்ல. அவர்கள் சிக்கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த போராட்டத்திற்கான பணம் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தான் வருகிறது என்றும் கூறினார். மேலும் இந்த பணம் பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
இது குறித்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையான விவசாயிகள் போராட்டம் நடத்தினால் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும். காய்கறி, பால், உணவு, தானியங்கள், பழங்கள் போன்றவை சந்தைக்கு சென்று அடைந்து இருக்காது என்றும் பல்வேறு குற்றங்களை அவர்கள் மீது தெரிவித்திருக்கிறார்.